வங்க நாட்டார் தங்கள் நாட்டைக் குறித்து மிக்க
பெருமையுள்ளவர்கள். ‘ஸொனாரே பங்காலா’ என்று அடிக்கடி
சொல்லிப் பெருமையடித்துக் கொள்வார்கள். அதாவது
‘தங்கமயமான வங்க நாடு’ என்று பொருள். பூமி வளமுள்ள
தாயிருந்து நாட்டின் பெயரும் தங்கம் என்று இருந்தால்
யாருக்கும் பெருமை ஏற்படுவது இயல்புதானே?
அப்படி வங்காளிகள் பேசிப் பெருமையடித்துக் கொண்டது
ஆறாயிரம் மைலுக்கு அப்பால் சென்று ஆங்கிலேயன் காதில்
விழுந்தது! வந்துவிட்டான் கப்பல் ஏறி! உலகத்தில்
எங்கேயாவது தங்கம் இருந்தால் அது ஆங்கிலேயனுக்குத்தான்
சொந்தம் என்று இங்கிலீஷ் வேதத்திலே எழுதி
வைத்திருக்கிறதல்லவா? ஆகவே, ஆங்கிலேயன் இந்தியாவுக்கு
வந்ததும் முதன் முதலில் வங்கநாட்டைத் தான் கவர்ந்தான்.
வங்க நாட்டிலிருந்து ஆங்கிலேயன் கொள்ளை கொண்டுபோன
பணத்துக்கு இன்று வரையில் வட்டிபோட்டுக் கணக்குப்
பார்த்தால், தமிழ்க் கணக்கு முறைப்படி கோடி, மகாகோடி,
சங்கம், மகாசங்கம், வெள்ளம், மகாவெள்ளம், சமுத்திரம்,
மகா சமுத்திரம் என்ற கணக்கிலேதான் சொல்லவேண்டும்.
இப்படியெல்லாம் வங்க நாட்டுப் பொருளைக் கொள்ளை
கொண்டுபோன இங்கிலீஷ்காரன் அதற்கெல்லாம்
பிராயச்சித்தமாகவும் பரிகாரமாகவும் ஒரு காரியம்
செய்தான்.
வங்க தேசத்து மகாகவி ஒருவரை
உலகத்துக்கு அறிமுகம் செய்வித்தான். உலகத்துக்கு என்ன?
இந்தியாவுக்கும் வங்க நாட்டுக்குமே அறிமுகம் செய்து
வைத்தான்.
டாக்டர் ரவீந்திரநாத டாகூரின்
கவிதைகள் சில ஆங்கில பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டு,
‘கீதாஞ்சலி’ என்ற பெயருடன் புத்தகமாக வெளியிடப்பட்டது.
அதற்கு ஸ்வீடன் தேசத்திலே உள்ள ஒரு ஸ்தாபனத்தார்
‘நோபெல் பரிசு’ என்ற சர்வதேச இலக்கியப் பரிசை
அளித்தார்கள். உடனே இந்திய தேசத்தில் உள்ள படித்த
மனிதர்கள் அத்தனை பேரும் விழித்துக் கொண்டார்கள்.
கூர்மையான திருஷ்டியுடன் நோக்கினார்கள். ஓஹோ! இங்கே
நமது நாட்டில் நமது காலத்தில் ஒரு கவிஞர் இருக்கிறார்.
அவர் கவிபாடுகிறார்! கவி, ஐயா கவி!" என்ற மகத்தான
உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். எல்லாரும்
மகாகவி டாகூருக்கு ஜே!" என்று கோஷமிட்டார்கள்.
- ‘தாகூர் தரிசனம்’ வானதி பதிப்பகம்
